.

Thursday, May 11, 2017




தார்மீகத் துடிப்புடன் ஒரு மக்கள் தலைவன்,
தோழர் ஜெகன்
n ஆரூர் பட்டாபிராமன், மாநிலச் செயலர், தமிழ்நாடு

[ “MARXISM AND TRADE UNION – Activities in Telecom Sector “
        A small booklet published in the memory of Com. Jagan on the occasion of the Inauguration of JAGAN BHAWAN on 9th April, 2011 at Chennai என்ற வெளியீட்டில் இடம் பெற்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ]

நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், (தொழிலார்ச் சாதி)யென்று சொன்னான்,
ஈங்கிவனை யாம்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்? “
தோழர் ஜெகன் என நாம் அனைவரும் பாசத்துடன் அழைக்கும் நம்முடைய ஜெகன்உலகத் தொலைத்தொடர்பு நாளாகஅனுசரிக்கப்படும் மே மாதம் 17 ம் நாள் 1931 ல் பிரந்தியங்கரை என்ற தஞ்சை மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தார். தஞ்சைத் தரணி அப்போது இடதுசாரி விவசாயக் கூலித் தொழிலாளர் இயக்கங்கள், தந்தை பெரியாரின் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் காங்கிரஸின் தாக்கம் நிறைந்த கோட்டையாக விளங்கியதுதோழர் ஜெகனின் தந்தையார் அந்தப் பகுதியின் நன்கறிப்பட்ட வழக்கறிஞராகவும் இரக்க சீலமிக்கக் கொடையாளியாகவும் இருந்தார்.
சமூக சேவகர்
        தபால் தந்தித் துறையில் 1951, நவம்பர் 13 ம் நாள் தனது இளமை பொங்கிவழியும் உணர்வுகளோடும் உற்சாகத்தோடும் ஜெகன் காலடி எடுத்து வைத்தார்இலாக்காவிற்குள் வருவதற்கு முன்பே பொது வாழ்வில் ஈடுபட்ட அனுபவம் அவருக்கு உண்டுகாங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். திராவிடர் கழகத்தின் கருப்புச் சட்டை மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.
        தொலைபேசி இயக்குநராகக் கடலூரில் பணியில் சேர்ந்தவரின் சமூகசேவைக் களம் அருகே இருந்த ஒரு சேரிப் பகுதிஅந்தச் சேவைக்காக அன்றைய ஹரிஜன நலத்துறை அமைச்சரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
    
பொதுவாழ்வில் விருதுகள் போலவே தண்டனைகளுக்கும் ஆளானார்பிரபலமான சோஷலிசத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா அவர்களின் பொதுக்கூட்ட உரையை (கடலூர் முத்தையா திரையரங்கு மேடையில்) மேடையில் தமிழாக்கம் செய்ததற்காகச் சம்பளத்தின் துவக்க நிலைக்கு ஊதிய வெட்டை ஏற்றார். மார்ச் 1958 ல் விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்துப் பேசியதற்காக மற்றுமொரு தண்டனை.  1960 வேலைநிறுத்தத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து வாழ்க்கையில் தொழிலாளர் நலனுக்காக ஜெயிலுக்குச் செல்வது என்பதை அவர் ஒரு கலையாகவே தொடர்ந்தார்.
        1968 வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது ஜெகன் வேலைநீக்கம் செய்யப்பட்டார்வேலையில்லாத காலத்தே துயர் துடைக்கும் ஒரு சிறு உதவியாக ஒரு பத்து ரூபாய் நோட்டை தொழிலாளர்களின் சார்பாக தோழர் குப்தா ஜெகனுக்கு அளித்தார்அந்த நோட்டைப் பெறற்கரிய ஒன்றாய் ஜெகன் நேயத்தோடு பாதுகாத்தார்.
        தோழர் ஜெகனின் தனித்துவம் அவர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தார்மீக அம்சங்களுடன் கடைபிடித்ததேயாகும். கடைமட்டத்திலும்கூட நீதி நேர்மை நியாயம் என்ற தார்மீகப் பண்புகளை உறுப்பினர்களிடம் மேம்படச் செய்வதில் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வார்மற்றவர்களின் இன்னல்களைக் காணச் சகியாமல் கண்ணீர் துளிர்க்க உணர்ச்சி வசப்பட்டவராக அவரைப் பலமுறை கண்டிருக்கிறோம்.
        அவரது மொழி ஆளுமை அளவிடற்கரிய உயர் தரமுடையதுகவித்துவமிக்க அவரது சொற்பொழிவு கேட்போர் பிணிக்கும் தன்மையது. கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு சொக்க வைக்கும், சொல்லின் செல்வர் அவர்நம்முடைய பெருந்திரள் கூட்டத்தினரிடையே தொழிற்சங்கச் செய்திகளைப் பேசும்போதுகூட, நம் முன்னோர்களின் -- விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீர வரறாற்றை, தியாகத்தை நம் நெஞ்சில் பதிய வைக்கத் தவறமாட்டார்
        தோழர் ஜெகன் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த எழுத்தாளரும் கூடநம்முடைய தொலைத்தொடர்பு இதழ்களில் மட்டுமல்லாது, முன்னணிப் பத்திரிக்கைகளான தினமணி மற்றும் நீயூ ஏஜ், ஜனசக்தி முதலிய இடதுசாரி இதழ்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்
        அவர் ஒரு சஞ்சாரிபிரயாணங்கள் மேற்கொள்வதில் சற்றும் அலுப்போ சலிப்போ அடையாத தோழர் குப்தா அவர்களுக்கு இணையாக தோழர் ஜெகனின் சுற்றுப்பயணங்களைத் தயக்கமின்றி ஒப்பிடலாம்தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பரவிக் கிடக்கும் தொலைபேசிக் கிளைகளுக்குச் செல்வதில் -- தலமட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடுவதில் -- அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் அவர் சோர்வடைந்ததே இல்லைகடைக்கோடி கிளையில் இரவு கூட்டத்தை முடித்துவிட்டு மறுநாள் காலை எப்போதும் போலபால்ஸ் கன்ட்ரோலில்அவரது உற்சாகமான குரலைக் கேட்கமுடியும்.
ஜெகன்பல்துறை வித்தகர்
        தமிழ்நாட்டில் அவர் தொடாத துறை இல்லை, அவர் பங்கேற்காத இயக்கமில்லைகல்லூரி ஆசிரியர் இயக்கம் தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர் இயக்கம் வரை எல்லாவற்றிலும் அவரால் உயிரோட்டமாகப்  பங்கேற்க முடிந்ததென்றால், அதற்குத் தார்மீக கொள்கை நெறிசார்ந்த அவரின் தலைமைப் பண்பே காரணம்.  ஆதரவுப் பேச்சால் அல்ல, தேவையெனில் களத்தில் அவர்களோடு தோளொடு தோள் நின்று தனது சிந்தனை ஆற்றலை அவர்களின் பிரச்சனைத் தீர்விற்குப் பயன்படுத்துவார்.அவர்களோடு கைதாகிச் சிறைக்கும் செல்வார்அவர்தான் ஜெகன்.
        உலக சமாதான இயக்கத்தின் பெரும் தலைவர்களில் ஒருவர் ஜெகன்இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகம், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், விஞ்ஞானக் கழகங்கள், கலை இலக்கிய அமைப்புகள், வீதி நாடகக் குழுக்கள் என பலவற்றிலும் பங்கேற்கும் தோழமையும் தனது நேரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் நேயம் மிக்க தலைவர் அவர்.
        பாரதியின் கவிதைகளில் பைத்தியமான காதலர். பொருத்தமான அவரது கவிதை வரிகள் எப்போதும் ஜெகனின் உரைவீச்சில் இன்னும் கனன்று தெறிக்கும்.  
தோழர் ஜெகன் நேசிக்கும் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகளும் நேருவும் ஆவார்கள்ஆனால் அவர் நடந்ததோ மார்க்ஸியத்தின் வழிமார்க்ஸியத்தின் உண்மையான தத்துவத்தின்படி -- அதன் மெய்யான சமூக அரசியல் கோட்பாடுகளின் அர்த்தத்தில் ஊன்றி நின்று தனது பாதையைச் சமைத்துக் கொண்டவர்அதனால்தான் இடதுசாரி தத்துவத்தைத் தொழிற்சங்க இயக்கத்தில் செயற்படுத்துவதில் சொல்லையும் செயலையும் ஒருங்கிணைத்து, முரண்பாடுகளைக் குறைத்து, அவரால் வெற்றிபெற முடிந்தது.
அவர் பொறுமைசாலி, தோழர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்எனவே நெறியற்றன செய்து தவறிழைக்கும் தோழர்களும் திருந்திட தேவைக்கு அதிகமாகவே சந்தர்ப்பம் தருவார். திருந்திட வாய்ப்பளிப்பார்தோழர்களை நெறிப்படுத்துவார்அவர் தனது கருத்துகளைச் சந்தேகத்திற்கிடமின்றி, ஒளிவு மறைவின்றி உறுதியாக வெளிப்படுத்துவார். ஆனால் கருத்துகளை எந்த மேடையில் எந்த அமைப்பில் கூற வேண்டுமோ அங்கே மட்டும் தான் தெரிவிப்பார்.
பிரச்சனைத் தீர்வுக்காகப் பேசப் போகும்போது எந்தவித காழ்ப்புணர்வுமின்றி திறந்த மனத்துடன் செல்வார்அவர் எடுத்து வைக்கும் வாதங்களில் இருக்கும் உறுதிக்கு முன்னால் எந்தக் கடினமான பிரச்சனையும் தீர்வடையாமல் இருந்ததில்லைமாநாடுகளில் ஒருமித்த முடிவு கொண்டுவருவதில் அவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.
தோழர் ஜெகன் அவர்களைத் தோழர் குப்தாவின் ஆகச்சிறந்த மேம்பட்ட மறுவடிவமாகவே காண்கிறோம். இவ்விரு ஆகப்பெரிய  ஆளுமைகள் தொலைத்தொடர்பின் லட்சக் கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவார்கள் என்பது உறுதியான நம்பிக்கை.
தோழர் ஜெகன், ஓர் அற்புத அபூர்வமான பண்புகளின் உறைவிடம். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வித்தியாசம் ஏதுமில்லா வித்தகர்.
பொது வாழ்வில் அவரது உண்மை, நேர்மை, நாணயம். . .
ஞானத்தின் மேன்மை, வாய்மை. . .
கடமையாற்றுவதில் கண்ணியம். . .
வாதிடுவதில் திறந்த மனப்பான்மை, ஆற்றல், உறுதி . . .
எதிர்கொள்ள நேரிடும்போது தளரா நெஞ்சுரம்  . . .
மேன்மையானமென்மையான அணுகுமுறை . . .

எங்கள் ஜெகன் , எங்கள் ஜெகன்
இவை யெல்லாம் எங்கள் ஜெகன் !
என்றும் நம்மை உயிர்ப்பாய் வைத்திருக்கும் !

உற்சாகத்தின் ஊற்றாய் நிலைத்திருக்கும்

நன்றி:  தோழர் பட்டாபி 

No comments:

Post a Comment