.

Tuesday, April 25, 2017

  தோழியர் BSN பணி நிறைவு பாராட்டு விழா
     

  கடலூர் மாவட்ட அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராகப் (Office Superintendent) பணியாற்றி ஏப்ரல் மாத இறுதியில் பணி நிறைவு செய்யும் தோழியர் BSN என அனைவராலும்    அன்பாக    அழைக்கப்படும்   தோழியர்       B.S. நிர்மலா அவர்களுக்கு மாவட்ட அலுவலகக் கிளை சார்பில் பாராட்டு விழா 24/04/2017 உணவு இடைவேளையின்போது மிகச் சிறப்பாக நடைபெற்றது.  

              கிளைத் தலைவர் தோழர் K. சீனுவாசன் அவர்கள் தமக்கே உரிய கவிதை நடையும் நகைச்சுவை உணர்வும் மிளிர தலைமை தாங்கி நடத்தினார். கிளைப் பொருளாளர் தோழர் A.S.  குருபிரசாத் அனைவரையும் வரவேற்றார்.

 வாழ்த்துரை நிகழ்வில் முதலில் மாவட்டத் துணைத் தலைவர் தோழியர் V. கீதா தோழியரின் பண்பு நலன்களையும் கிளைச் சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகளையும் எடுத்துக் கூறினார்.  

          மாவட்டப் பொருளாளர் தோழர் A. சாதிக் பாஷா (இளநிலைக் கணக்கதிகாரி) அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றத் தோழியரின் சங்கப் பற்றையும், பொறுப்புகளை முன்வந்து ஏற்றுக் கொண்டு தோழியர்களை அரவணைத்து அமைப்பு ரீதியாகத் திரட்டும் பணிகளை --இலாக்கா பணிபோலவே -- சிறப்பாகச் செயலாற்றியத் திறன்களையும் பாராட்டினார். திரளாக கலந்து கொண்டுள்ள தோழியர்கள் முன்வந்து பணிஓய்வு பெறும் தோழியரைப் பாராட்டிப் பேசுவதுதான் மேலும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

            தோழியர் BSN அவர்களுக்குக் கிளையின் சார்பாக தோழியர் மைதிலி பொன்னாடை அணிவித்தார்.  மாவட்டத் தலைவர் தோழர் R. செல்வம் நினைவுப் பரிசளித்தார்.

         பின்னர் மேனாள் மாவட்டச் செயலாளர் தோழர் P.S. வாழ்த்திப் பேசும்போது பெண்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் அதற்கான வாய்ப்புக்களை நமது தொலைபேசித் துறை பெரிதும் வழங்கிய சரித்திரப் பின்னணியை விளக்கினார்.  தோழியர் BSN 1975 முதல் நெடிய சேவையாற்றி உள்ளார். அறுபதுகளுக்குப் பிறகுதான் பெண்கள் பணிக்கு வருவது துவங்கியது.  70 / 80 களில் மேலும் அதிகரித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது  என்றபோதும் மேல்நாடுகளை ஒப்பிடுகையில் குறைவுதான். பெண்கள் பங்கேற்காத நிகழ்வுகள் நிறைவு பெறுவதில்லை; அது போராட்டங்கள் ஆயினும் சரி, பெண்கள் பங்கேற்றால்தான் முழுமை பெறுகின்றன.  ஆனால் தற்போது அரசுப் பணிகளே குறைந்து வரும்போது பெண்களின் வாய்ப்பும் குறைவது கவலையளிக்கக் கூடியது.  தோழியர் BSN போல இயக்குநர்கள் 90--களுக்குப் பிறகு மாவட்ட அலுவலகத்தில் எழுத்தர்களாகப் பணியில் சேர்ந்த பிறகு பழகுவதில், பணித்தன்மைகளில், உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.  தோழியருக்கு எனது வாழ்த்துகள்.

            வெளிப்புறக் கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி, முன்னால் மாவட்ட அலுவலகக்கிளையின் பொருளாளரும் தற்போது கணக்கதியாரியாகப் பணியாற்றிவருபவருமான தோழியர் லலிதா வாழ்த்திய பிறகு மாவட்டத் தலைவர் தோழர் R. செல்வம் தனதுரையில் தோழியர் BSN சஞ்சார் சாரதி விருது பெற்றதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

            மாநில உதவிச் செயலாளர் தோழர் P. சுந்தரமூர்த்தி தமது வாழ்த்துரையில் தான் மாவட்டச் செயலராக இருந்தபோது அங்கிகாரமும் சங்க அலுவலக இடமும் இல்லாத நிலையில் தோழியர் BSN, தோழியர் லலிதா மற்றும் மறைந்த நம்முடைய தோழியர் கே.வி. அவர்களின் பணியாற்றும் இடம்தான் மாவட்டச் சங்க அலுவலகமாகத் திகழ்ந்ததைக் குறிப்பிட்டு வாழ்த்தினார்.


   






தோழர் P . காமராஜ்  மாநில தலைவர்  உரை
    
       இறுதியாகச் சிறப்பு விருந்தினர் தோழர் P. காமராஜ், மாநிலத்     தலைவருக்குக் கிளைச் செயலாளர் தோழர் எஸ். இராஜேந்திரன் பொன்னாடை அணிவித்தார்மாநிலத் தலைவர் தமது சிறப்புரையில் கடலூரில் அவர் தோழியருடன் பணியாற்றிய நினைவுகளையும், நாம் எதிர்நோக்கியுள்ள ஊதிய மாற்றத்தின் பின்புலம் மற்றும் இன்றைய நிலைமைகளையும் எடுத்துத்துரைத்தார்அவரது உரை வருமாறு:
        “ தமிழ் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  1980 நவம்பரில் நான் கடலூருக்கு மாற்றலில் வந்தேன்அப்போது தோழர் என்.கே.எஸ்., மாவட்டச் செயலாளர் தோழியர் கே.வி., மாவட்டப் பொருளாளர்அப்போது நமது உறுப்பினர் எண்ணிக்கை குறைவுதான், FNTO சங்கத்தின் ஆகப் பெரியத் தலைவர்கள் பணியாற்றிய FNTO வின் மையமாகக் கடலூர் இருந்ததுடிரங்க் எக்சேஞ்சு வாழ்க்கைத் தனித்துவமானது. அனைவரும் இளைஞர்கள் என்பதால் எப்போதும் எக்சேஞசுதான்.  ’ டூட்டின்னா gate லையும் off ன்னா டிரங்க் ஸ்விச்ட் போர்டு ரூம்லையும் இருப்பீங்களேன்னு ஓரு சூப்ரவைசர் குறிப்பிடுவார். சங்கங்களுக்கிடையே கொள்கை மாறுபாடுகள் மோதல்கள் இருந்தாலும் அது தனி மனித உறவை இயக்குநர்களுக்கிடையே பாதித்ததில்லைஅன்பான உறவு, அது கடலூரில் இன்னும் சற்றுக் கூடுதல். FNTO தலைவர் தோழர் முத்துராகப்பன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இரவு முழுதும் ஹாஸ்பிட்டல்லேயே இருந்தோம், அவர்கள் உறவினர்கள்கூட மறுநாள் தான் வந்தனர். அன்பான உறவு, அது கடலூரில் இன்னும் சற்றுக் கூடுதல். அப்போது தோழியர் BSN நெல்லிக்குப்பத்தில் இருந்தார்நம்முடைய இலாக்கா பிரச்சனைகளெல்லாம் அவரது கணவர் திரு விஜயராகவனுக்குத் தெரியும் என்ற அளவு நெருக்கமான உறவு. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

        அடுத்த ஊதிய மாற்றம் பற்றி:
        சென்றமுறை நமக்கு 30 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்தது. அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றக்குழுத் தலைவர் திரு சதீஷ் சந்திரா அவர்கள், இம்முறை ஊதிய உயர்வு தாராளமாக 15 சதம் வரை இருக்கலாம் எனக் கூறியுள்ளார்; காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பளக்குழு அளித்துள்ள உயர்வு 14.26 சதவீதம் மட்டுமே என்கிறார்.
        மற்ற துறைகளிலும் நிலமை அவ்வாறேதான் உள்ளது.  NLC ல் 10 சதவீதம், வங்கித்துறையில் 4 முறை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய பிறகும் 11 சதவீத உயர்வுதான். சம்பளக்குழுக்களுக்கு terms of reference தரும்போது அரசு சாதுரியமாக ஒரு கட்டாயத்தை உருவாக்கிவிட்டது. அது, மத்திய 7 வது சம்பளக்குழு முடிவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான்.
        ஆண்டு உயர்வுத் தொகை அனைவரும் பொதுவாக 5 சதவீதம் வேண்டும் என்று கோரியபோதும் அது ஏற்கப்படவில்லை
கணக்குப் பிரிவு உயர் அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வியப்பான ஒரு தகவலைச் சொன்னார்நமக்கு ஸிரோ சதவீதம் உதிய உயர்வாகக் கணக்கிட்டால்அதாவது தற்போது நாம் பெறும் அடிப்படை ஊதியம் அதனோடு கிராக்கிப்படியைக் கூட்டி புதிய ஊதியம் நிர்ணயம் செய்தாலே, நிறுவனத்திற்கு ரூபாய் 2,500 கோடி கூடுதல் செலவாகும்எப்படி எனில், புதிய அடிப்படைச் சம்பளத்திற்க ஏற்ப கூடுதல் வீட்டுவாடகைப் படி மற்றும் பென்ஷன் கொடை உயரும் என்பதால்.
ஒரு நிறுவனம் வரி கழித்துக் கொள்வதற்கு முன்பு கணக்கிடப்படும் தனது லாபத்தில் 20 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வாகத் தரலாம் எனவும் வழிகாட்டல் தரப்பட்டுள்ளது.
சதீஷ் சந்திரா குழு சொல்லியபடி 15 சதவீதம் தர முடியாவிட்டால் நாம் ஈட்டிய லாபமான ரூபாய் 700 கோடியை எப்படிப் பிரிக்க முடியுமோ அப்படிஅது அதிகபட்சம் 3 சதவீதம் வரலாம்.
தற்போதைய மத்திய ஆட்சியாளர்களின் எண்ணப்போக்குகளை-- கொள்கை நிலைபாட்டை-- இரயில்வேத் துறையில் காணலாம்..  இரயில்வே அதிகாரிகள், அரசு விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர மூன்று ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் தனி இரயில்வே பட்ஜெட்டை ஓழித்து விட்டு அதனைப் பொது பட்ஜெட்டோடு இணைத்து விட்டார்கள். நமது TRI போல ஒழுங்குமுறை வாரியத்தை இரயில்வேயிலும் கொண்டு வந்துள்ளார்கள்.    இரயில்வே கார்பரேஷனாக மாற்றப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதுஇரயில் பாதைகள் வாடகைக்கு விடப்படலாம். இனி வால்வோ பேருந்துகள் போல வால்வோ இரயில்களைகயும் காணலாம்.
உலகப் புகழ்பெற்ற டாக்டர் குரியன்அவர் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் பணியாற்றியதை அறிவோம்இப்போது அரசின் மனப்போக்கு எவ்வாறு உள்ளது எனில், மருத்துவமனை நடத்துவது இரயில்வேத் துறையின் பொறுப்பா எனக் கேட்கத் துவங்கி உள்ளார்கள். அதேப் போலத்தான் இரயில்வே காவல்துறைஇவற்றில் எல்லாம் தனியார் மயம் விரைவாக அமலாகும் ஆபத்து உள்ளது.
இதற்கு மத்தியில் நமது ஊதிய மாற்றம் குறித்து நம்பிக்கை அறிகுறிகளும் உள்ளது.
முதலில் எல்லா தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக உள்ளோம்.
இரண்டாவது, BSNL நட்டமடைந்த துறையாக அறிவிக்கப்படவில்லை என்பதால், சதீஷ் சந்திராவின் நட்டமடைந்த நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் கிடையாது என்ற சதீஷ் சந்திராவின் பரிந்துரை பொருந்தாது.
மேலும் நமது CMD நம்பிக்கை தரும் அறிக்கையைத் தந்துள்ளார்பொதுத்துறை நிறுவனமாக நாம் மாற்றப்படாமல் இருந்திருந்தால் மத்திய 7 வது சம்பளக்குழு வழங்கிய ஊதிய மாற்றத்தை எங்கள் ஊழியர்கள் பெற்றிருப்பார்கள்; BSNL நிறுவனத்தின் நிதி வசதியைப் பெருக்க முடியும்வருங்காலங்களில் ஊழியர் எண்ணிக்கை குறையும்நாங்கள் பல புதுமையான புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம்ஊழியர்கள் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள்தொடர் நட்டம் குறைந்து நடப்பாண்டு இயக்க லாபம் (operational profit) அடைந்துள்ளோம். மேலே சொல்லிய விபரங்கள் நமது CMD  பதிலில் உள்ளவைமுதலில் நாம் ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துவோம் பின்னர் அலவன்ஸ் சலுகைகள் என்பதே பொதுவான நிலைபாடு.
MTNL இணைப்பு என்பது இன்னொரு பிரச்சனை. MTNL அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு அதன் பங்கு விற்பனை முதலில் சர்வதேசிய அளவில் லண்டனில் தான் ஆரம்பித்தார்கள்பின்னர்தான் மும்பைஇப்போது நிலமை தலைகீழ். சிறிய MTNL க்கு ஏகப்பட்ட கடன், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குஅதன் ஊழியர்கள் பெறும் சம்பளமும் அதிகம். நம்மின் ஒவ்வொரு ஸ்கேலும் ஒருபடி உயர்வாகடெலாயிட் கமிட்டி BSNL ல் உபரி ஊழியர்கள் எனும்போது எப்படி மேலும் MTNL ன் 40,000 ஊழியர்களை இணைப்பது, சம்பளங்களில் சமன்பாடு காண்பது? MTNL  ஊழியர்கள் அரசுப் பென்ஷன் பெறுவதற்காக 78.2 உயர்வைக்கூட கைவிடத் தயாராக உள்ளனர்கடனையும் அரசு ஏற்கத் தயார் எனக் கூறுகிறதுஆனால் நமது BSNL ன் சொத்து இரண்டரை லட்சம் கோடி ஆயிற்றே.
இந்தப்பிரச்சனையையும் நாம் இணைந்தே சந்திப்போம்.
சென்ற முறை நட்டம் 320 கோடி. தற்போதைய நட்டம் 150 கோடி மட்டும் தான்உங்களுடைய கடலூர் மாவட்டம் தற்போது லாபத்தில் இயங்குகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.  ’நலந்தானாதிட்டத்தில் கடலூர்தான் முதல் இடம். அதற்கான விருதினை உங்களுடைய துணைப் பொது மேலாளர் பெற்றுக் கொண்டார்.
தமிழகத்தின் அரசியல் சமூக நிகழ்வுகள்அது, நெடுவாசல் வாடிவாசல் ஆனாலும் சரி, முதல்வர் மருத்துவமனையில் இருந்தது, பின்னர் அரசியல் மாற்றங்கள்எல்லாம் நமது நிறுவனத்தின் வருவாயைப் பாதிக்கவே செய்கின்றனமிக அதிக அளவில் தரைவழி புதிய தொலைபேசி இணைப்புகளைக் கடுமையான உழைப்பால் உயர்த்தி இருக்கிறோம்ஆனாலும் சென்ற ஆண்டைவிட மொத்த லைன்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது, காரணம் அதைவிட சரண்டர் அதிகம். இதில் நம் லைன்ஸ்டாப் தோழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்பழைய சந்தாதாரர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் நம் உழைப்பை நல்க வேண்டும்.
நம்பிக்கையோடு நடைபோடுவோம்பிரச்சனைகள் உண்டெனினும், நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம்.  BSNL நிறுவனம் காப்போம், உயர் ஊதியம் காண்போம், நன்றி! வணக்கம்! “
பின்னர் சுருக்கமான ஏற்புரையாற்றிய தோழியர் B.S.  நிர்மலா அவர்கள் மாவட்ட சங்கத்திற்கு சுமார் ரூபாய் 7000 மதிப்புள்ள 15 புதிய நாற்காலிகளை நன்கொடையாக வழங்கினார்மேலும் கிளைச் சங்கத்திற்கு ரூ 1000 ம்  TMTCLU சங்கத்திற்கு ரூபாய் 500 ம் வழங்கினார். அவர் தமது உரையில் : “  எனது 42 ஆண்டுகால பணியில் 4 ஆண்டுகள் நெல்லிக்குப்பத்திலும், கடலூரில் 30 வருடங்களும் பணியாற்றி உள்ளேன். பெங்களூருவில் முதலில் இரண்டு ரூபாய் சந்தா ரசீது தந்ததிலிருந்து நான் NFTE சங்கத்தில்தான் உள்ளேன்சங்கம் நடத்துவதில் உள்ள சிரமங்கள் எனக்குத் தெரியும்சில நேரங்களில் சிலருக்குப் பிரச்சனைத் தீர்வு தாமதமாகலாம்ஆனாலும் நாம் உறுதியோடு இயக்கத்தில் தொடர வேண்டும். முழு மன நிறைவுடன் நான் ஓய்வு பெறுகிறேன்அனைவருக்கும் நன்றி என பலத்த கரவொலிக்கிடையே உரையினை நிறைவு செய்தார்.
தோழர் A. சகாயசெல்வன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நெஞ்சம் நிறைந்த விழாவில் நெகிழ்ச்சியான நிகழ்வுதொடர்ந்து மருத்துவச் சிகிச்சையிலும் ஓய்விலும் இருக்க வேண்டிய நமது மாவட்டச் செயலாளர் அருமைத் தோழர் இரா ஸ்ரீதர் அவர்கள் உடல்நிலை சோர்வுற்ற நிலையிலும் தனது துணைவியார் உதவியுடன் வந்திருந்தது அனைவருக்கும் உற்சாக மூட்டியதுநீண்ட இடைவெளிக்குப் பிறகு தோழர்களைப் பார்த்தது நிச்சயம் அவருக்கும் உற்சாகம் தந்திருக்கும்விரைவில் குணமடைய நம் அனைவரது வாழ்த்துகள்




No comments:

Post a Comment