.

Tuesday, March 11, 2014

விவாதம் என்பது சண்டையல்ல!
By பிரபா ஸ்ரீதேவன்

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் மறைவுக்குப்பின் அவரைப்பற்றி கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய ஒரு கட்டுரையில் இடம் பெற்ற ஒரு வாசகம்: "விவாதத்தில் மற்றவரை வெல்லவேண்டும் என்று முயற்சி செய்யாதே. உரையாடல் ரகங்களில் அது தரம் குறைந்தது. எதிராளி தன் எண்ணத்தை சொல்லட்டும். நீ சொல்ல நினைப்பதை சொல்லி பிறகு விட்டு விடு, அந்த சொற்கள் தங்கள் செயலை மெதுவாக செய்யவிடு என்று அவர் என்னிடம் ஒரு முறை கூறினார்' - இன்று இந்த அறிவுரை நமக்கு மிகவும் தேவை.

பொதுவாக இன்று நம் நாட்டில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது, மாற்றுக் கருத்தினைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற பண்பாடும் இல்லை; பொறுமையும் இல்லை.

மார்க் டல்லியின் "இந்தியாவின் முடிவில்லா பயணம்' (Indias Unending Journey) என்ற நூலில், அவர் அயர்லாந்து நாட்டு கவிஞர் மீஹால் ஓஷீல் (Michael Osiadhail ) சொன்னதை பகிர்ந்து கொள்ளுவார்.


"ஆம், ஒரே கண்ணோட்டம்தான் உள்ளது என்று சொல்லமுடியாது.

எவருக்கும் உண்மையின்பால் ஏகபோக உரிமை கிடையாது.

நீ இது போல் சொல்லிக்கொள்ள வேண்டும்.

நான்தான் சரி என்று நான் நினைக்கிறேன், நான் தவறாக இருக்கலாம்.

நீ தான் சரி என்று நீ நினைக்கிறாய், நீ

தவறாக இருக்கலாம்.

இன்றிலிருந்து இந்த மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்லலாமா?

சுதந்திரம், சுதந்திரப்பண் பாடினோம்,

(மெல்ல மெல்ல, எதுவும் இன்று பேசலாம்)

எப்படியோ நீயும் நானும் வேறாகிப் போனோம்,

விதண்டாவாதம் பிதற்றுபவர் போல;

பேபெல் ஸ்தூபி கட்டுனர் போல.


- ஓஷிலின் "சுதந்திரம்' என்ற கவிதையின் ஒரு பகுதி இது. எதுவும் பேசலாம் என்பதினாலேயே நாம் கவனமாகப் பேச வேண்டும்.

தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சிகள் எல்லா மொழிகளிலும் வருகின்றன. எல்லாரும் ஒரே சமயத்தில் கோஷ்டி கானம்போல பேசுகிறார்கள். உண்மையின் மறு பெயர் இரைச்சலா என்று தெரியவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் (அவரும் பெரும்பாலும் உரக்கதான் பேசுவார்) ஒரு கேள்வி கேட்பார், "ஏன் நீங்கள் இவ்வாறு செய்தீர்கள்' என்று. அதற்கு பதில் என்னவாக இருக்கவேண்டும்? "இது தான் எங்கள் கொள்கை', அல்லது "இது நாங்கள் தீர ஆலோசித்து வந்த முடிவு' அல்லது "அது தவறுதான் என்பதை பிறகு உணர்ந்தோம்' போன்ற விடைகள், விளக்கங்கள்தானே?

ஆனால் அதை விடுத்து "அவன் தான் முதலில் செய்தான்' என்று சொன்னால், சிறு வயதில் நம் ஆசிரியர் வகுப்பில் கேட்பார் "இங்கே வா, ஏன் பலகையை உடைத்தாய்' "அவன்தான் டீச்சர் முதலில் உடைத்தான்'. அந்த இடத்திலிருந்து நாம் யாருமே நகரவில்லையா? பள்ளிக்கூடத்திலேயே உறைந்து போய்விட்டோமா? இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எல்லாரும்... எல்லாரும் இதையே செய்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல எல்லாரும்.

மற்றவர்கள் குரல்களைக் கேட்டு பதிவு செய்து கொள்வதில்தான் ஒரு சமூகம் வளர்ச்சி பெறும்; ஆன்ம வளர்ச்சியும் நடைபெறும். இப்பொழுது தொலைக்காட்சியினால் நம் பிம்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆகையால் உரக்க கத்திவிட்டு தனக்கே கைத்தட்டலாக ஒரு புன்சிரிப்பும் உதிர்க்க வேண்டியுள்ளது.

எத்தனை மக்கள் பார்க்கிறார்கள்? அவர்கள்முன் நாம் குரலை தாழ்த்தினால்கூட தோல்வியை ஒப்புக்கொள்வது போலாகாதா? அதனால் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்கூட கே.ஆர். நாராயணன் அறிவுரையை பின்பற்றுபவர்களை அழைக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

பொது வாழ்வில் இரு துருவங்களாக இருந்தவர்கள்கூட தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் இன்று விவாதம் என்பது சண்டையாக கீழே இறங்கிவிட்டது. இங்கு நட்புக்கு இடமில்லை. பண்பாடு என்பது மென்பாடு என்றில்லாமல் வன்பாடு ஆகிவிட்டது.

சமீபத்தில் ஜானதன் ஹெய்ட் என்பவர் எழுதிய The Righteous Mind  என்ற புத்தகம் படித்தேன். அதன் இரண்டாவது தலைப்பு மிக சுவாரசியமானது - "நல்ல மனிதர்கள் ஏன் அரசியலாலும் மதத்தாலும் பிரிக்கப்படுகின்றனர்?' சபாஷ் சரியான கேள்வி என்று "வஞ்சிக்கோட்டை வாலிபன்' வீரப்பா போல நாமும் பாராட்டலாம்.

இந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயம், "நம்மால் ஆக்கபூர்வமாக எதிர்வாதம் செய்ய முடியாதா?' (cant wree  more constructively ?). அவர் இடதுசாரி கண்ணோட்டம் உள்ளவர்களையும் வலதுசாரி கண்ணோட்டம் உள்ளவர்களையும் பற்றி கூறி, ஒருவர் மற்றவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துக்கொள்ளக்கூட முடியாதா என்று கேட்கிறார். ஒப்புக்கொள்ள சொல்லவில்லை புரிந்துகொள்ளலாமே என்றுதான் ஆதங்கப்படுகிறார்.

உதாரணத்திற்கு வேர்க்கடலையை எடுத்துகொள்வோம். ஒருவருக்கு அது பிடித்த உணவு; இன்னொருவருக்கு அது அறவே பிடிக்காது; மூன்றாமவருக்கு அது ஒவ்வாமை உணவு. ஒவ்வொருவருக்கும் அவருடைய கண்ணோட்டம் தான் நிஜம், உண்மை, சத்தியம். எப்படி உனக்கு பிடிக்கலாம் என்றோ, எப்படி வெறுக்கலாம் என்றோ, எப்படி ஒவ்வாமை என்று சொல்லலாம் என்றோ கேட்க முடியுமா?

வேர்க்கடலையை வெறுப்பவர் அதன் கேடு விளைவிக்கும் தன்மையைப பற்றி பேசலாம். அதற்கு விடையாக அதை விரும்புபவர் அதன் நன்மையைப் பற்றி கூறலாம். அவ்வளவே. ஒருவரை ஒருவர் ஏசலாமா? அவர் கண்ணோட்டம் அது, அவ்வளவே. ஆனால் இன்று நம்மைச் சுற்றி பார்த்தால் மாறுபட்ட கருத்து என்றாலே யாருக்கும் சகிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

முன்னேற்றம் என்றால் மாற்றம்தானே? மாற்றம் வருவதற்கு பலவித குரல்கள் ஒலிக்கவேண்டும். கலீலியோ அன்று "சூரியனைச் சுற்றி உலகம் சுழலுகிறதே தவிர, உலகத்தை சுற்றி சூரியன் செல்லவில்லை' என்று சொன்னார். அந்த மாற்றுக் கருத்தை அன்று யாரும் ஒப்புக்கொள்ள வில்லை. மாறாக, அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் கண்டுபிடிப்புதானே இன்றும் நிற்கிறது?

"எங்கிருந்தும் நல்ல கருத்துகள் வீசட்டும்' என்கிறது வேதத்தின் வாக்கு. அதற்கு நாம் நமது ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். நமக்கு ஏற்கவில்லை என்றால், "அந்த கருத்தை சொன்னவர் மேல் கல்லெறிவேன்' என்று ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் கூறாது. இன்று சமூக வலைதளங்கள் இந்த போக்கை உற்சாகப்படுத்துகின்றன. அந்தத் தளங்கள் தரும் பாதுகாப்புப் போர்வையினால், எனக்கு பிடிக்காத கருத்து சொல்பவரை எப்படி வேண்டுமானாலும் ஏசலாம் என்றாகி விட்டது.

குதிரைக்கு நான்கு கால்கள் என்பவரிடம், என் முயலுக்கு மூன்று கால் என்று சொன்னால், இங்கு விவாதம் குதிரையைப்பற்றியோ முயலைப்பற்றியோ அல்ல. அவையில் என்ன சொல்கிறார் என்று கேட்டு புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரத்த குரல்களின் சொந்தக்காரர்கள் பலரும் புரிதல் வேண்டும் என்பதை புரிந்து கொள்வதில்லை.

மேற்சொன்ன புத்தகத்தில் ஜானதன் ஹெயிட் கூறுகிறார்: "1995க்கு முன் இரு கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே நிகழ்ச்சிகளுக்கு செல்வார்கள். குடும்பங்களும் நட்பாக இருந்தன. ஆனால் இன்றோ கட்சிதாண்டிய நட்பு மறைந்து வருகிறது. நிலம் தீய்க்கும் அரசியல் பரவுகிறது' என்கிறார். அவர் கூறுவது அமெரிக்கர்களைப்பற்றி. நம்மைப்பற்றி நமக்குத் தெரியும்.

அது என்ன "நிலம் தீய்ப்பது?' அது ஒரு போர் முறை. எதிரிக்கு உதவும் எல்லாவற்றையும் தீய்த்துவிடுவது. BC யில் வாழ்ந்த கிரேக்கரும் "இண்டிகா' என்ற நூலை எழுதியவருமான மெகஸ்தனிஸ் BC 4இல் நம் போர் முறையைப்பற்றி ஒன்று கவனித்தாராம். "மற்ற நாடுகள் போர் செய்யும்போது எதிரியின் நிலத்தை அழித்து அதை விளைச்சலுக்கு தகுதியில்லாமல் செய்வது வழக்கம். ஆனால் இந்தியர்கள் நிலத்தை உழுபவர்களை போற்றுகிறார்கள். ஆகையால், போர் நடந்தால்கூட, போர் பூமி குருதிக்களமாக ஆனால் கூட அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாய நடவடிக்கைகளை அவர்கள் அழிப்பதில்லை; அவர்கள் எதிரியின் நிலத்தை எரிப்பதில்லை; மரங்களை வெட்டுவதில்லை' என்று சொன்னாராம்.

இதை அலைன் டானியலு (Alain Danialou ) எழுதிய "இந்திய சரித்திர'த்தில் (A Brief History of India ) பார்க்கலாம். "நிலம் தீய்க்கும் கொள்கை' நம்மிடம் அன்று இல்லை என்கிறார். அன்று போரிடும் நேரத்திலும் அறம் காத்த நாம் இன்று வாதம் புரியும் நேரம் அறம் காக்க மறக்கிறோம்.

ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். அப்பொழுதுதான் பல குரல்கள், பல எண்ணங்களின் சேர்க்கையினால் தெளிவு பிறக்கும். பரமபத சோபான ஆட்டத்தில் ஏறுவோம், இறங்குவோம். ஆனால் காயை நகர்த்தினால்தான் வெற்றியடையும் வாய்ப்பு கிட்டும். அதை விட்டு, காயை நகற்றாமல் அங்கேயே நின்று எதிரியை நேராக அடித்தால் எப்படி ஆட்டத்தை ஆடமுடியும்? யோசிக்கவேண்டும்.


கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

நன்றி : தினமணி 

No comments:

Post a Comment