.

Friday, August 12, 2011

அமெரிக்க பொருளாதரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களாக, அமெரிக்கா, கடன், கிரெடிட் ரேட்டிங் போன்ற சில வார்த்தைகளை பேப்பர்களிலும் டி.வி யிலும் கேட்டிருப்போம்.  அப்படி என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்கா தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் எத்தனை பலமாக பரப்பியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு. 

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதுஎன்ன கடன் தர வரிசை?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் திறன்,  "கடன் தர வரிசை" என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை தொட்டுவிடும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.அதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர்த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண்டாவது சாத்தியமில்லாத சமாச்சாரம்.

அமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது. இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை. 2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் சமரசமாகி, மேலும் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங்கும் அளவை உயர்த்த ஒப்புக் கொண்டனர். ஒரு தற்காலிக நிம்மதி அமெரிக்காவுக்கு. ஆனால் புதிதாக முளைத்துள்ள பிரச்சினை கொஞ்சமல்ல…

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.

இதனால்தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA+ என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலுத்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே பயம் பரவிவிட்டது. 

இதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து சறுக்கின. இன்னமும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.

அது ஏன் அமெரிக்காவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகிறது? பணம் தான்.  அமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷயங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னால், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளின் நிலைமை என்னாகும்… அதேதான் இப்போது நடக்கிறது!

இந்த பாதிப்பு தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை. பங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவே இன்னும் சில மாதங்கள் - வருடங்களுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங்கம் பற்றி செய்தி படித்துக் கொண்டிருக்க வேண்டி வரலாம்! எனவே இப்போது நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அமெரிக்கா நல்லாயிருக்கணும் என்று பிரார்த்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கிறது!

பொருளாதர ரீதியில் மிக வலுவான நாடாக மாறிவரும் 'சீனா' அமெரிக்காவை அதட்டிப் பார்க்கிறது.  "கொஞ்சம் 'காமன் சென்ஸை' உபயோகப்படுத்துங்கள், உங்களது நாட்டிற்கு கடன் கொடுத்தவர்களின் நலனைக் காப்பது அவசியம் "  என உபதேசிக்கிறது. ஏனெனில் 2 டிரில்லியனுக்கு மேல் சீனா முதலீடு செய்துள்ளதே!

இந்தியாவும் சில பில்லியன்களை முதலிடு செய்துள்ளது!

நமது 'செயல்படும்' பிரதமர் 'மன்மோகன்' என்ன சொல்கிறார்?  
எப்போதும் போல 'நிலைமையை உன்னிப்பாக கவனிப்பார்'.  
இல்லாவிடில் 'எனக்கு எதுவும் தெரியாது, நிதி அமைச்சரைக் கேட்க வேண்டும்' என்பார். சோனியா வேறு ஊரில் இல்லை!  
                                                               -0-

Print Page

No comments:

Post a Comment