.

Wednesday, May 18, 2011

'சிரில்' என்னும் மாமனிதன்.


19-05-1971.  "சிரில்' என்னும் மாமனிதன் நம்மை விட்டு பிரிந்த நாள். 
40 ஆண்டுகளுக்குப் பின்னும், நமது தொழிற்சங்க வரலாற்றில் இவருடைய பெயர் சொல்லப்படும் போதெல்லாம், இவரது தியாகமும், அர்ப்பணிப்பும், கடமை உணர்வும், தன்னல மறுப்பும், தொழிற்சங்க சேவையும் கண்முண்ணே நிற்கின்றன!

இவரால் உருவாக்கப்பட்டவர்தான் 'அக்கினிக் குஞ்சு' என அனைவராலும் வியக்கப்பட்ட தியாகச் சுடர் தோழர் "ஜெகன்"

இவரால் உருவாக்கப்பட்டவர்கள்தான் கடலூர் மாவட்டம் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ள அருமைத் தோழர்கள் 'ரகு', "ரங்கனாதன்"'

எளிமையானவர். கவிஞர். கதாசிரியர்.  கட்டுரையாளர். மனித நேயர்.
எல்லாவற்றிற்கும் மேலாக விடாப்பிடியான "போராளி"

ஒரு எளிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பும் சிறிதளவே!
நமது இலாக்கவில் 1950 களில், கேஷுவல் மஸ்தூராக பணியைத் துவக்கிய இவர்,   லைன்மேனாகி, மெக்கானிக்காகி பணிக்காலம் முழுமையடையும் முன்னரே , 'இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்து நமக்கு வழிகாட்டாமல் மறைந்துவிட்டாரே" என ஏங்குமாறு அகால மரணம் அடைந்துவிட்டவர்.

"தராசு", "துலாக்கோல்", "சுண்டுமுத்துக் கவிராயர்" என்ற புனைப் பெயர்களில் அவர் தமது படைப்புகளை செய்து வந்தார். இவரது படைப்புகள் அனைத்திலும், உழைக்கும் வர்க்க உணர்வுகளின் பிரதிபலிப்பும்,  மனித நேயமும்,மானுடமும் நிறைந்து காணப்படும். அந்த நாட்களில் இலாக்கவிற்கு வந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களுக்கு இவரது படைப்பான "லட்சம் பேர் உங்கள் பக்கம்"  தொழிற்சங்க பாடப் புத்தகமாகவே இருந்தது. ஏராளமான கட்டுரைகள், ஊழியர் பிரச்சினகளை மையமாக வைத்து இவரால் எழுதப் பட்டன.  இவரது சிறுகதைத் தொகுப்ப்பான "பாலம்" என்ற புத்தகத்தை 1988-கடலூர் மாநில மாநாட்டில் வெளியிட்டு பெருமை அடைந்தோம்.

 இலாக்கா பணியில் இவர் எல்லோருக்கும் முன்மாதிரி.  அக்காலத்தில் இலாக்காவில் மாநில அளவில் "பெயர் சொல்லும் அளவிற்கு அறியப்பட்ட" ' மெக்கானிக்குகளில் ஒருவராகத் திகழ்ந்தார். 

தமக்கு அளிக்கப்படும் நேரம், வெறும் "மூன்று நிமிடம்" தான் என்றாலும், அதற்குள் சொல்லவேண்டிய விஷயங்களை கோர்வையாக,தெளிவாக, ஆணியடித்தற்போல பதிவு செய்யும் ஆர்ப்பாட்டமில்லாத,  நாவண்மை நிறைந்த பேச்சாளர்.  இந்த வகையில்,1966-ல் வேலூர் மாநாட்டில் 'விதிப்படி வேலை' போராட்டம் பற்றிய இவரது உரை,  1967 கோட்ட மாநாட்டில் 'இந்தி எதிர்ப்பு'  என்ற போர்வையில் சங்கத்தலைமையை பிடிக்க நடந்த 'ஆவேச உரைகளுக்கு '  பின்னர் இவர் ஆற்றிய  ஆராவாரமற்ற, கருத்தாழமிக்க,   அமைதியான பேச்சு - ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். 


பேச்சுத் திறன் மட்டுமல்ல, போராட்டங்களில் பங்கெடுப்பதிலும் இவர் வழிகாட்டி. கடுமையான நோய்வாய்ப்பட்டு, மருத்துவ மணையில் இருந்த போதிலும், விடாப்பிடியாக மருத்துவ மணையிலிருந்து வெளி வந்து செப்டம்பர் 19 வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்.  வேலை நிறுத்தம் என்றதும் மருத்துவ விடுப்பில் சென்ற சில தலைவர்கள் காலத்தில், இந்த மனிதனை செலுத்திய தத்துவம் எது?  தளர்ச்சி உடலில் என்றாலும், மனதில் வைரம் தீட்டிய உறுதியுடன் செயல்படத் தூண்டியது எது? அது தான் அவர் பேசியும்,நடந்தும் காட்டிய "பொது உடமை சித்தாந்தம்" தான்

நம்பற்கரிய நேர்மையாளர்.  தனது மகன் "பாலனுக்கு" நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட 'பார்ட்டைம்' வேலையினை கூட, வேலைக்கு சேர்ந்த நாளன்றே, தொழிற்சங்க நேர்மை கருதி, விடச்செய்த நேர்மையாளார்.

மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்த சிரில் மறைந்த 'மே'  மாத்தில் இவரது மாணாக்கரான தோழர் ஜெகனின் திருவுருவச்சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது நிறைவானதே.

நன்பனாய் 
மந்திரியாய் 
நல்லாசிரியனுமாய், 
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்  
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்திட்டோம்!!

19-05-2011 - தோழர் சிரிலின் 40-வது நிணைவு நாள்

No comments:

Post a Comment